Total Pageviews

Tuesday 27 July 2010

‘பலமாகத் தட்டுபவன்தான், கதவு திறந்தே இருப்பதை அறிவான்!’

ரவந்திரநாத் தாகூர்
--------------------------------------------------------------------------------------
ரவந்திரநாத் தாகூர் எழுதிய ‘கீதாஞ்சலி’ கவிதை நூலுக்கு, 1913- ம் ஆண்டு உலகின் மிக உயரிய இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கொல்கத்தாவுக்கு அருகே சாந்திநிகேதன் கல்விக்கூடத்தில் தங்கியிருந்த கவிஞரைப் பாராட்டுவதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாகக் குவிந்தார்கள். ஆயிரமாயிரம் பேர் பாராட்டினாலும்
மற்றொருபுறம் வயிறு எரியும் இலக்கியவாதிகளும் இருக்கத்தான் செய்தார்கள்.

‘‘ஆங்கிலத்தில் ‘கீதாஞ்சலி’ மொழிபெயர்க்கப்படாமல் இருந்தால், பரிசு கிடைத்திருக்குமா? இந்த விருது ஆங்கிலேயர்கள் வாங்கிக் கொடுத்ததா?’’ என்பன போன்ற விமர்சனங்கள் எழுந்தன. உடனே ஆவேசமடைந்த தாகூர், ‘‘நம் நாட்டில் என் கவிதை போற்றப்படவில்லை. அதனால், உலக அளவில் வெற்றிபெற விரும்பியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். வெற்றிக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும், பலர் அதனை அறிவதே இல்லை. ‘பலமாகத் தட்டுபவன்தான், கதவு திறந்தே இருப்பதை அறிவான்’ ’’ என்று
பதில் கொடுத்தார்.

கொல்கத்தாவில், 1861-ம் வருடம், ஒரு பணக்காரக் குடும்பத்தில் 14-வது கடைசி குழந்தையாகப் பிறந்தார் ரவந்திரநாத் தாகூர். வீட்டிலேயே அறிவியல், கணிதம்,வரலாறு, பூகோளம், வடமொழி, வங்காளம், ஆங்கிலம், இசை, ஓவியம், உடற்பயிற்சி என எல்லா கலைகளையும் கற்கத் தொடங்கி, ஏழாவது வயதிலேயே கவிதை புனையவும் தொடங்கினார். 1877-ம் ஆண்டு வெளியான தாகூரின் முதல் நாடகத் தொகுதியில், வங்காள மொழியின் முதல் சிறுகதையும் இடம் பெற்றது. வழக்கறிஞர் பட்டம் பெறுவதற்காக இங்கிலாந்து சென்ற தாகூர், அந்தப் படிப்பு பிடிக்காமல் இரண்டே வருடத்தில் இந்தியா திரும்பினார். 22-வது வயதில் திருமணம் முடிந்ததும் குடும்ப நிர்வாகத்தைக் கையில் எடுத்துக்கொண்டார்.

1901-ம் வருடம், சாந்திநிகேதனில் ஓர் ஆசிரமப் பள்ளியை நிறுவி, அங்கேயே
தங்கினார். அங்கு மாணவர்களுக்குத் தாய்மொழியில் படிப்பு கற்பிக்கப்பட்டதுடன் தோட்டவேலை, உடற்பயிற்சி, சமூகசேவை, விளையாட்டு என அத்தனை கலைகளும் கற்பிக்கப்பட்டன.

சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாக இறங்காமல் இருந்த தாகூர், ஆங்கிலேயர்கள் வங்கத்தினை இரண்டாகப் பிரிக்க முயன்றபோது, தலைமையேற்று போராட்டத்தில் குதித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் மிதவாதம், தீவிரவாதம் எனப் பிரிவினைகள் தோன்றியது மட்டுமின்றி முஸ்லிம், இந்துக்கள் பிரச்னகளும்  தலைதூக்கவே நேரடி அரசியலில் இருந்து வெளியேறினார். பல்வேறு நாடுகளுக்கு இலக்கியப் பயணம் மேற்கொண்ட நேரத்தில்தான், கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

‘கீதாஞ்சலி’க்கு நோபல் பரிசு கிடைத்ததும், ஆங்கில அரசும் ‘சர்’ பட்டம்
கொடுத்துக் கெள‌ரவித்தது. ஆனால், 1919-ம் ஆண்டில் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலையால் அதிர்ச்சியடைந்த தாகூர், உடனே ஆங்கில அரசின் பட்டத்தைத் தூக்கி எறிந்து, தான் ஆங்கிலேயரின் விசுவாசி அல்ல என்பதை வெளிப்படுத்தினார். காந்தியடிகளுடன் நட்போடு இருந்தாலும், கைராட்டையின் மூலம் சுதந்திரம் பெறுவதை விரும்பாமல், ‘பலமாகத் தட்டுபவன்தான், கதவு திறந்தே இருப்பதை அறிவான்!’ என்று உரக்கச் சொன்னார்.

உலகிலேயே மிகச் சிறந்த கல்விக்கூடத்தினை உருவாக்கவேண்டும் என்ற
தாகூரின் ஆசை 60-வது வயதில் நிறைவேறியது. ‘விசுவபாரதி’ என்ற உலகப் பல்கைலக்கழகத்தை சாந்திநிகேதனத்தில் உருவாக்கி, நோபல் பரிசுடன் கிடைத்த பணம்(???), தனது சொத்துகள் (???) மற்றும் புத்தக உரிமைகைளயும் இந்தப் பல்கைலக் கழகத்துக்கே எழுதி வைத்தார்.

ஒரு கவிதையில், ‘மரணம் வந்து கதவைத் தட்டும் நாளில் நீ என்ன செய்வாய்?’ என்று கேள்வி கேட்டு, ‘வந்த என் விருந்தாளியின் முன்னே தட்டு நிறைய என் வாழ்க்கையைப் பரிமாறுவேன். வெறும் கையுடன் திரும்பவிடவே மாட்டேன்’
என்று பதிலும் சொல்லியிருப்பார் தாகூர். அப்படியே அவரது 80-வது வயதில் ஒரு கவிதையைச் சொல்லி முடித்து, கண் மூடிய ஒரு மணி நேரத்தில் அமைதியாக மரணத்தைத் தழுவினார்.
--------------------------------------------------------------------------------------
நன்றி : எஸ்.கே.முருகன், பா.சீனிவாசன்,பொன்ஸீ
--------------------------------------------------------------------------------------

4 comments:

  1. அருமை சார்,பொக்கிஷம்

    ReplyDelete
  2. தாகூர் பற்றிய அருமையான தகவல் . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நன்றி... INDIA 2121 & மதுரை சரவணன்...

    ReplyDelete
  4. thanks for this message....
    realy good...

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
myfreecopyright.com registered & protected