ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்
-----------------------------------------------------------------------‘அன்பு செலுத்து’ என்று யாரோ கட்டளை இட்டதுபோல் குரல் கேட்கவே, 17
வயதான ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்தாள். அன்றைய தினமே அவள் கண்களில் பட்ட, ‘அன்பு செலுத்துங்கள்... காலம் குறைவாகவே இருக்கிறது!’ என்று தேவாலயச் சுவரில் இருந்த வாசகம் அவளைச் சிந்திக்கவைத்தது. அந்தச்சமயம், அவளைத் திருமணம் முடிக்க, மிகுந்த அந்தஸ்துள்ள குடும்பத்திலிருந்து ஒரு மணமகன் வந்தான். ஆனால், ‘‘என் மனதில் ஒரு விதை விழுந்திருக்கிறது. அதற்கு விடை கிடைத்த பின்னரே திருமணம்’’ என்று மறுத்துவிட்டாள்.
அதன்பின், ஒரு மருத்துவமனைக்குச் சென்ற ஃபிளாரன்ஸ், அங்கு
நோயாளிகளின் பரிதாப நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள். ‘அன்பு
செலுத்து’ என்ற வாசகத்துக்கு அர்த்தம் உணர்ந்தாள். உடனே, எவ்வித
அருவெறுப்பும் இன்றி நோயாளிகளைத் தொட்டுத் தூக்கி, துடைத்துச் சுத்தம்
செய்தாள். நடந்ததைக் கேள்விப்பட்ட அவளின் பெற்றோர் கடும் கோபம் அடைந்தனர். ‘‘உனக்குத் தொற்று நோய் வந்துவிடும். ஏன் இப்படிக் குடும்ப மானம் போகும்படி நடந்துகொள்கிறாய்? திருமணம் செய்துகொள்’’ என்று வற்புறுத்தினர். ஆனால், ஃபிளாரன்ஸோ ‘‘சாதனைகள் புரிந்து மக்கள் மனதில் இடம் பிடிக்கெவல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், ஆதரவுக்கு ஏங்கிக்கொண்டு இருக்கும் நோயாளிகளிடம் அன்பு செலுத்தி, அவர்கள் மனதில் இடம் பிடிக்கப் போகிறேன். எனக்கு வழிவிடுங்கள்... அன்பு செலுத்தக் காலம் குறைவாகவே இருக்கிறது’’ என்று பதில் சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு ஓடினாள்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பணக்கார குடும்பத்திலுள்ள வில்லியம் எட்வர்ட்
நைட்டிங்கேல் - பிரான்சஸ் ஸ்மித் தம்பதி, 1820-ம் வருடம் இத்தாலியில் சுற்றுப்
பயணம் செய்துகொண்டு இருந்தபோது, அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை
பிறந்தது. பிறந்த ஊர் பெயரான 'ஃபிளாரன்ஸ்’ என்பதையே அந்தக் குழந்தைக்குச் சூட்டினர். அந்தக் காலத்தில் படிக்காதவர்கள், வாழ்க்கையில் போக்கிடம் அற்றவர்கள் போன்றோர் மட்டுமே நர்ஸ் பணியில் இருந்ததால், அந்தத் துறை மட்டமாகவே மதிக்கப்பட்டது. ஆனால், 1850-ம் வருடம் லண்டன் மாநகரில், நர்ஸ் பணியில் விரும்பிச் சேர்ந்தார் ஃபிளாரன்ஸ்.
இங்கிலாந்து, பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து, 1854-ம் வருடம் ரஷ்யா மீது போர் தொடுத்தன. துருக்கியில் இங்கிலாந்து வரீர்கள் கடுமையாக காயமுற்று, கவனிப்பாரின்றி மரணமடைகிறார்கள் என்று கேள்விப்பட்டதும், ஃபிளாரன்ஸ் உடனடியாக 38 தாதிகளை அழைத்துக்கொண்டு அங்கே விரைந்தார். முதலில் சுகாதார வசதியைச் சீராக்கி, சிகிச்சை அளித்ததோடு, ஒவ்வொருவரின் குடும்பக் கதையையும் கேட்டுக் கடிதம், பணம் அனுப்பி உதவினார். எல்லோரும் உறங்கிய நள்ளிரவுக்குப் பின்னரும் ஒரு கை விளக்குடன் சென்று ஒவ்வொருவரையும் உற்றுக் கவனித்து, உதவிகள் செய்ததால், ‘கை விளக்கேந்திய காரிகை’ என்று அவளை அன்போடு அழைக்கத் தொடங்கினர்.
அவரின் பரிவான கவனிப்பால், 48 சதவிகிதமாக இருந்த மரணவிகிதம் 2 சதவிகிதமாகக் குறைந்தது. ‘‘எங்கள் மீது இத்தனை அன்பு செலுத்துகிறீர்களே... இதற்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்வது?’’ என கேட்டபோது, ‘‘எல்லோர் மீதும் அன்பு செலுத்துங்கள். காலம் குறைவாகவே இருக்கிறது!’’ என்றார் ஃபிளாரன்ஸ். போர்முனையில் ஃபிளாரன்ஸிக்குக் கிடைத்த நற்பெயரால் 50,000 பவுண்ட் நன்கொடை கிடைக்கவே, அதைக் கொண்டு மிகப் பெரிய நர்ஸ் பயிற்சி நிலையம் தொடங்கினார். 1860-ம் வருடம், ஃபிளாரன்ஸ் வெளியிட்ட ‘ நோட்ஸ் ஒன் நர்ஸிங்’ புத்தகம்தான் இன்றைய நர்ஸ் பயிற்சிக்கும் ஆதாரமாக உள்ளது. நோய்வாய்ப்பட்டு,
சுமார் 12 வருடங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கவே முடியாமல் இருந்த
காலத்திலும், தாதியருக்காகச் சுமார் 200 புத்தகங்கள் எழுதிய ஃபிளாரன்ஸ், தனது 90-வது வயதில் மரணமைடந்தார்!
-----------------------------------------------------------------------
good!!nalla vidayam
ReplyDeletetnx... Anonymous...
ReplyDelete